கடந்த 2022 ஆம் ஆண்டு சிதம்பரம்.எஸ் படுவல் இயக்கத்தில் மலையாள மொழியில் உருவான ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ திரைப்படம், மலையாள மொழி மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாக, இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான சமயத்தில், மலையாளத்தை விடவும் தமிழில் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்த படம் மிகப் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, நடிகர்கள் மட்டுமல்லாமல் படத்தின் இயக்குநர் உட்படத் தொழில்நுட்ப கலைஞர்களும் பிரபலமாகினர்.
இந்த நிலையில், இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது எர்ணாகுளம் தெற்கு காவல்துறை பாலியல் புகார் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள எலம்குளம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு இளம்பெண், இயக்குநர் சிதம்பரம் மீது எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ‘இயக்குநர் சிதம்பரம், தனது பிளாட்டில் புகுந்து, தன்னிடம் பாலியல் நோக்கத்துடன் தவறான முறையில் நடந்து கொண்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரைத் தொடர்ந்து இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட (74&75) பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், தேவை ஏற்பட்டால் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஒரு இளம் இயக்குநர் மீது இவ்வாறாக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரம், மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



