Homeஅரசியல்3 அதிமுக எம்எல்ஏ ராஜினாமா விளக்கம்: ‘சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காக’ - பரபரப்பு பேட்டி!

3 அதிமுக எம்எல்ஏ ராஜினாமா விளக்கம்: ‘சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காக’ – பரபரப்பு பேட்டி!

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து, விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தபோது, எஸ்.பி. வேலுமணி தரப்பு அ.தி.மு.க.வினர் த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

3 அதிமுக எம்எல்ஏ ராஜினாமா விளக்கம்: தவெகவில் இணைந்ததற்கான காரணம் என்ன?

இந்த சூழலில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான இவர்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளித்தனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், இந்த ராஜினாமா கடிதங்கள் சட்டசபை விதிகளின்படி முறையாக உள்ளதால் ஏற்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, மூவரும் இன்றிரவு பனையூரில் உள்ள த.வெ.க.வின் தலைமை அலுவலகத்திற்கு சென்று கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். பின்னர், கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்கள், தங்கள் ராஜினாமா குறித்து விளக்கமளித்தனர். மதுராந்தகம் மரகதம் குமரவேல் கூறுகையில், ‘நாங்கள் பதவி விலகியது சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காகவே இந்த முடிவை எடுத்தோம். தமிழகத்தில் தி.மு.க.வின் ஆதரவுடன் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார். ஆனால், அந்த நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை’ என தெரிவித்தார்.

மேலும், ‘சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்தோம். தொகுதி மக்களின் நிலைப்பாடு மற்றும் கோரிக்கையை முன்வைத்து இந்த நிலைப்பாட்டை எடுத்தோம். ஆனால், அ.தி.மு.க.வுக்கு பழனிசாமி துரோகம் செய்துவிட்டார். எங்களை பற்றி அவதூறு பரப்பினர். கடந்த 2021-ல் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களுக்கு எங்களால் எந்த நல்ல காரியமும் செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போதும் அது நீடித்தது. தொகுதி மக்களின் விருப்பத்திற்காகவே த.வெ.க. அரசை ஆதரிக்க முடிவு எடுத்தோம். தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ராஜினாமா செய்தோம். முழு மனதுடன் த.வெ.க.வில் எங்களை இணைத்துக்கொண்டோம். முதல்-அமைச்சர் விஜய் நல்ல ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றும் அவர் கூறினார்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை