Homeசெய்திகள்டாஸ்மாக் காலி பாட்டில் திட்டம்: பணியாளர்களுக்கு அமைச்சர் கொடுத்த முக்கிய வாக்குறுதி!

டாஸ்மாக் காலி பாட்டில் திட்டம்: பணியாளர்களுக்கு அமைச்சர் கொடுத்த முக்கிய வாக்குறுதி!

தமிழ்நாட்டில் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கும். இரவு 10 மணிக்கு மூடப்படும். அப்படியிருக்க, நேற்று (மே 27) கோவை, திருப்பூர் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

இது அங்குள்ள மதுப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு சில கடைகள் தாமதமாக மதியம் 2 மணிக்கு மேல் திறக்கப்பட்டன. கடைகள் திறக்கப்பட்டதும் முண்டியடித்துக்கொண்டு மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இன்னும் பல கடைகள் கடைசி வரை திறக்கப்படவே இல்லை.

பணியாளர்களின் போராட்டம் ஏன்?
டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் காரணமாகவே பல பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

அதன் காரணமாகவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாகின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டும், டாஸ்மாக் பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் நேற்று போராட்டம் நடத்தின.

சுற்றுச்சூழல் மாசடைவதை தொடர்ந்து, காலி மதுபாட்டில்கள் டாஸ்மாக் மூலமே திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதேநேரத்தில், இதை நிறைவேற்றும்படி கடந்த திமுக ஆட்சியிலேயே டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

காலி மதுபான பாட்டிலை திரும்பப் பெற டாஸ்மாக் பணியாளர்கள் இல்லாமல் தனியாக அதற்கென ஒரு பணியாளரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை செய்வதன் மூலம் டாஸ்மாக் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாகிறது என்றும் கூறப்பட்டது. கடந்த ஆட்சியிலேயே, இதற்கென தனி பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்க புதிய அரசு இதனை உடனடியாக அமல்படுத்தவே பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.

அமைச்சர் வைத்த வேண்டுகோள்
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் நேற்றிரவு (மே 26) வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம், 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது. இது படிப்படியாகத் தற்போது சென்னை, திருநெல்வேலி, விருதுநகர் நீங்கலாக தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகப் பணியாளர்களிடம் இருந்து புகார்கள் கடந்த காலங்களில் வந்த வண்ணம் இருந்தன. பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளி முகமை வழியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்னிறுத்தி ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பெரும்பாலான கடைகள் இன்று (அதாவது நேற்று) திறக்கப்படவில்லை.

மேலாண் இயக்குனர், அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் நேரில் அழைத்துப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் இயன்றவரை சரி செய்யப்படும் என்ற வாக்குறுதியை அளித்தும் கடைகள் திறக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த அறிவுறுத்தலில், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எவ்வளவு பொறுப்புள்ளதோ அதே அளவு பணியாளர்களுக்கும் பொறுப்பு உண்டு என்றும், இதனை செயல்படுத்த பணியாளர்கள் தங்களது முழு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அமைச்சர் கொடுத்த வாக்குறுதி
இந்நிலையில் பணியாளர்களின் கோரிக்கையின்படி, வெளி முகமையின் வழியாக காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக உருவாக்கி உயர் நீதிமன்றத்தில் உறுதிப் பத்திரம் (affidavit) அளிக்கப்படும். மேலும், வரும் ஜூன் மாத இறுதிக்குள் பணியாளர்களின் கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றும் வகையில், பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை கையாளும் அவர்களின் தற்போதைய நடைமுறையை முழுமையாக தவிர்க்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

எனவே, பணியாளர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து, பணியாளர் நலன் காக்க நிர்வாகம் முன்மொழியும் இத்திட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு நாளை (அதாவது இன்று – மே 27) முதல் வழக்கம் போல பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். இதனால், இன்று முதல் வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் தமிழகம் எங்கும் பிரச்னையின்றி பகல் 12 மணிக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை