தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் முந்தைய ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 10 சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காமலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் தாமதப்படுத்தி வந்ததார். இதையடுத்து அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுனருக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது.
ஆனால் அந்த சட்டங்களை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை முழுமையாக விசாரிக்காத சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு , அந்த சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதையும் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரம், அந்த வழக்கை 6 வாரங்களில் விசாரித்து தீர்ப்பளிக்கும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம்
இந்த சூழலில் தமிழக அரசு சட்டங்களின் வாயிலாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்ற நிலைப்பாட்டை மாற்ற புதிய அரசு எந்த முயற்சி செய்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள த.வெ.க. அரசும் ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன், ஆளுநர் தான் வேந்தர் ஆக தொடராக விரும்புகிறாரா.. முதல்வர் விஜய்யின் ஒப்புதலுடன் அறிவித்தாரா என்று கேள்விகளை விசிக எழுப்பி உள்ளது.
விழுப்புரம் எம்பியும் விசிக பொதுச்செயலாளருமான ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், “பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை” என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதலமைச்சர் விஜய் அவர்களின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?” என்று ரவிக்குமார் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.

