பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த 2022 அம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் முல்க. ஸ்டாலினால் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை முதல்வர் மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தற்போது வரை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் புதிய அரசாக பொறுப்பேற்றுள்ள தவெக இதுபோன்ற மக்கள் நல திட்டங்களை தொடருமா? என்ற கேள்வி இருந்தது. முதலமைச்சர் விஜய் அவை அனைத்தும் தொடரும் என தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், காலை உணவு திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்திருக்கிறார். இன்று தலைமை செயலகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக தேர்வு செய்யப்பட்ட ஆறு தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய ராஜ்மோகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பள்ளிகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பாக, கல்வி நிறுவனங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதையும், சுகாதாரமான கழிவறை வசதிகள் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கழிப்பறைகளில் முறையான கதவுகள் மற்றும் தண்ணீர் வசதி தடையின்றி உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மையைச் சோதிக்கவும், தொழில்நுட்ப ஆய்வகங்களை முழுமையான பயன்பாட்டுத் திறனுடன் தயார் நிலையில் வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
அதேபோல், புதிய கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விலையில்லா சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை எவ்விதத் தொய்வுமின்றி விநியோகிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி திறப்பு தேதி
சமீப நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் காக்கும் பொருட்டு, தற்போதைய வானிலை நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை வானிலை ஆய்வு மையத்திடம் அரசு கோரியுள்ளது.
கல்வித் துறையில் உள்ள அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் பரிசீலிக்கச் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள், தற்காலிகப் பணியிடங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருப்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசித்து, விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
காலை உணவு திட்டம் தொடருமா?
அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடர்ந்து தடையின்றி நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் எந்தவொரு இடத்திலும் குறைந்துவிட கூடாது என்பதில் அரசு விழிப்புடன் உள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு கிடைப்பதை உறுதி செய்ய, தேவைக்கேற்ப காலை உணவுப் பட்டியலில் ஆரோக்கியமான புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும்” என்று குறிப்பிட்டார்.
பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அத்துமீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான தற்காப்பு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறியவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஏதுவாக, அவசர உதவிக்கான ‘இலவச தொலைபேசி எண்கள்’ நடப்பு கல்வியாண்டின் அனைத்து பாடப்புத்தகங்களிலும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சாதி, மத அடையாளங்களுக்கு தடை
பள்ளி வளாகங்கள் என்பது மாணவர்கள் கல்வி கற்கும் பொதுவான இடமாகும். எனவே, கல்வி நிறுவனங்களுக்குள் சாதி அல்லது மதம் சார்ந்த எந்தவொரு அடையாளங்களையோ, பாகுபாடு காட்டும் நடவடிக்கைகளையோ கூட்டுப் பிரார்த்தனைகளையோ அனுமதிக்கப் போவதில்லை என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

