தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பமாக, முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை திடீரென விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மே 21, 2026 அன்று காலை 10 மணிக்கு, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடைபெற்ற பெரிய விழாவில், 23 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த மே 10 அன்று முதலமைச்சர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றிருந்த நிலையில், இந்த அதிரடி விரிவாக்கம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதிய கூட்டாட்சி சகாப்தம் மற்றும் அமைச்சரவையின் தற்போதைய பலம்
தமிழ்நாடு அரசியல் களம் கடந்த பல தசாப்தங்களாகத் தனிப்பெரும் கட்சிகளின் ஆட்சியை மட்டுமே கண்டு பழகிய ஒன்று. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய இந்த நகர்வு, மாநிலத்தில் ஒரு புதிய கூட்டணி சகாப்தத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளது.
59 ஆண்டுகளுக்குப் பின் அமைச்சரவையில் காங்கிரஸ்!
இந்த அமைச்சரவை விரிவாக்கம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். தவெக கட்சியின் 21 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இது 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 59 ஆண்டுகள் கழித்து, காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் நேரடியாக பங்கு வகிக்கிறது. இந்த நிகழ்வு வரலாற்று ரீதியாக மிக முக்கியமானது.
கேபினட் ஸ்ட்ரென்த்
1)முந்தைய அமைச்சர்கள் எண்ணிக்கை: 10 (முதலமைச்சர் உட்பட)
2)இன்றைய புதிய சேர்க்கை: 23 அமைச்சர்கள்
3)மொத்த அமைச்சரவை பலம்: 33 ஆக உயர்வு
4)அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச பலம்: 35 (மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு)
இதில் உள்ள சட்ட விதி என்ன?
இந்திய அரசியலமைப்பின் 91-வது திருத்தச் சட்டப்படி, ஒரு மாநிலத்தின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை அந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15% ஐ மீறக்கூடாது.
தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் 15% என்பது 35 ஆகும். இதன் பொருள் தமிழ்நாட்டில் அமைச்சர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 35 ஆகும்.
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.”
தமிழக அரசு தனது அரசியல் நகர்வை வெளிப்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சிகளை ஆட்சியில் பங்குதாரர்களாக மாற்றுவதன் மூலம், அரசு தனது முதிர்ச்சியான அரசியல் நகர்வை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் சார்பில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். ஷாஜஹான் அமைச்சரவையில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அவர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பின்னர் தனியாகப் பதவியேற்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அமைச்சரவையின் பலம் விரைவில் 34 ஆக உயரும்.
முக்கிய அமைச்சர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்
புதிதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் சில அமைச்சர்களின் இலாக்காக்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்தார்.
மூத்த தலைவர் கே. ஏ. செங்கோட்டையன் நிதித்துறையில் இருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பிரிவுகளின் பட்டியல் இங்கே:
அமைச்சர்: திருமதி. மேரி வில்சன்
தொகுதி: ராதாகிருஷ்ணன் நகர்
துறை: நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை
அமைச்சர்: ஏ. ஸ்ரீநாத்
தொகுதி: தூத்துக்குடி
துறை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
அமைச்சர்: எஸ். கமலி
தொகுதி: அவினாசி
துறை: கால்நடை பராமரிப்புத் துறை
அமைச்சர்: எஸ். ராஜேஷ் குமார்
தொகுதி: கிள்ளியூர்
துறை: சுற்றுலாத்துறை
அமைச்சர்: பி. விஸ்வநாதன்
தொகுதி: மேலூர்
துறை: உயர்கல்வித்துறை
அமைச்சா்: ஜே. முகமது பர்வாஸ்
தொகுதி: அறந்தாங்கி
துறை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அமைச்சர்: கே. ஜெகதீஸ்வரி
தொகுதி: ராஜபாளையம்
துறை: சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை
சமூகச் சமநிலை மற்றும் பிரதிநிதித்துவம்:
முதலமைச்சர் விஜய் இந்த அமைச்சரவை உருவாக்கத்தில் சமூக நீதியையும், பிராந்திய சமநிலையையும் நன்கு கையாண்டுள்ளார். இந்த அமைச்சரவையில் நான்கு பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்துடன், 7 பட்டியல் சாதியினருக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அமைச்சரவையின் தனித்துவமான அம்சம் என்றால், இளைஞர்களுக்கும், முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகும்.
பதவியேற்பு விழாவில் வெடித்த புதிய சர்ச்சை!
எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் ஒரு புதிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் அலுவல்முறை நிகழ்வுகளிலும் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலில் பாடப்பட்டு, நிகழ்வின் இறுதியில் ‘தேசிய கீதம்’ பாடப்படுவதுதான் பல ஆண்டுகால மரபாக இருந்து வருகிறது.
இன்று லோக் பவனில் நடைபெற்ற விழாவில், ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘தேசிய கீதம்’ முதலில் பாடப்பட்டது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த மாற்றம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதியார் கூறிய,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற வரிகளுக்கு ஏற்ப, தமிழ் மண்ணில் தமிழ் மொழிக்கு எப்போதும் முதலிடம் கொடுக்க வேண்டும்.
அரசாங்கத்தின் திடீரென மாற்றத்திற்கு, திமுக, மதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. மாநிலத்தின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி, புதிய மரபுகளைக் கொண்டுவர முயற்சிப்பது கூட்டாட்சி கொள்கைக்கும் தமிழர் உணர்வுக்கும் எதிரானது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போதைய அரசு தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய வாக்குறுதிகளை மீறி செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தவெக அரசின் அடுத்தகட்ட நகர்வுகள்
அமைச்சரவை முழு பலத்துடன் இருப்பதால், தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்தில் முதலமைச்சரான சி. ஜோசப் விஜய், தூய்மையான நிர்வாகம் மற்றும் ஊழலற்ற ஆட்சி பற்றிய தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
புதிய அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் கோப்புகளில் நாளை முதல் கையெழுத்திட்டு தங்கள் பணிகளைத் தொடங்குவார்கள். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முறியடித்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து இந்த பெரிய கூட்டணி அரசு சாதனைகளைப் படைக்குமா என்பதை காலம்தான் சொல்லும்!

