Homeசெய்திகள்ஈரானின் தொடர் தாக்குதல்; இஸ்ரேல் பிரதமரின் நிலை தெரியாததால் பதற்றம்!

ஈரானின் தொடர் தாக்குதல்; இஸ்ரேல் பிரதமரின் நிலை தெரியாததால் பதற்றம்!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் வெடித்த வண்ணம் உள்ளன. அணுசக்தி ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலால், போர் நிலவும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அரபிய நாடுகள் தானாக முன்வந்து இரு நாடுகளும் தங்களுக்கிடையே இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தது.

அதனால் இரு நாடுகளும் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே மூன்று கட்டமாக அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் தலைநகர் தெக்ரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல கட்டடங்கள் சேதமடைந்த புகைமண்டலமாக காட்சியளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

அதே போன்று ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி சையித் அப்தோல்ரஹீம் மௌசவி, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஸீஸ் நாசிர்ஸதேஹ் ஆகியோரும் அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்க நட்பு நாடுகளான கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக துபாயில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் இந்த போர் சூழலால், உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் இஸ்ரேலின் விமானப்படை தளபதி அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலை என்னவென்று தெரியாததால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. முன்னதாக சவுதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உள்ள சவுதி அரம்கோ (Saudi Aramco) எண்ணெய் ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் அந்த ஆலை தீ பற்றி எரிந்த நிலையில் உடனடியாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை