திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சின்னத்துரை என்கிற பட்டியலினப் பள்ளி மாணவனை கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரையையும் அவரது சகோதரியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சாதிய ரீதியாக இந்த தாக்குடல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அதே சமயம் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. அதோடு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம், மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
நாங்குநேரில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பகுதியில் வடமாநில தொழிலாளர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு மிகப்பெரிய வன்முறை சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை நாங்குநேரி அருகே கடம்போடு வாழ்வு என்ற கிராமத்தில் நேற்று இரவில் இருசக்கர வாகனங்களில் அரிவாளுடன் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த வாகனங்களை பிடிங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு பெரும்பத்து கிராமத்திற்குச் சென்று அங்குள்ள டீக்கடை மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள், பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனை பார்த்த அந்த கும்பல், தப்பியோடியவர்களை விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அந்த கும்பல், புளியங்குளம் பகுதிக்குச் சென்று இரண்டு பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொடூரச் சம்பவத்தில் வடமாநில தொழிலாளர் ஜான் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அந்த பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், நெல்சன், ராமசாமி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஒரே இரவில் 3 கிராமங்களுக்கு அத்துமீறி நுழைந்து கிராமத்தினரை கொடூரமாகத் தாக்குதல் நடத்திய கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கஞ்சா போதையில் நடந்த தாக்குதலா அல்லது சாதிய மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த கும்பலை பிடிக்க காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த கொடூரக் கொலைகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிண்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், நாங்குநேரி உள்பட அதனை சுற்றுவட்டார கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



