கடந்த ஆண்டு கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவைத் தொடர்ந்து,
அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான டிசம்பர் 3ஆம் தேதி, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றப்படாமல் வழக்கமாக ஏற்றப்படும் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் இந்து அமைப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மலை மீது ஏற முயன்றனர். அவர்களை தடுத்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் உள்பட பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, போராட்டம் செய்த இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை அம்மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது. அதனால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும்,மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார். அதே போல் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பு, இந்து சமய அறநிலையத்துறை தரப்பு, சிக்கந்தர் தர்கா தரப்பு மேலும் சில தனி நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், இந்த வழக்கு அரசியல் நோக்கோடு பார்க்கப்பட்டுள்ளது என்றும், இரு தரப்புக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளது என்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்காது என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒவ்வொரு கார்த்திகை தினத்தின் போது மலை உச்சியில் உள்ள தூணில் கோயில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ராம ரவிச்சந்திரன் தொடுத்த வழக்கு இன்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று (02-03-26) நீதிமன்றத்தில் ஆஜராகி, 144 தடை விதித்ததற்கு மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் கூறியதாவது, ‘சூழ்நிலையை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவை பிறப்பித்தோம். இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை’ என்று மன்னிப்புக் கேட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், ‘அப்படி என்றால், மலைமேல் சென்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நாங்கள் இவர்கள் நியமித்துள்ளோம் என்று ஒரு ஐந்து பெயரைகூறுங்கள்… அப்படி மாவட்ட ஆட்சியர் கூறிவிட்டால், இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்’ என்று கூறினார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘உயர் அதிகாரிகளை கேட்டு தான் கூற முடியும்’ என்று பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அந்த உயர் அதிகாரிகள் யார்? அதை தான் நானும் கேட்கிறேன். இந்த உத்தரவை ஏன் அமல்படுத்த மறுக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் வாதிடுகையில், ‘இரண்டு நாள் நேரம் கொடுங்கள், நாங்கள் யார் யாரை அனுப்புவது? என்பது குறித்தான விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம்’ என்று கோரிக்கை வைத்தனர்.



