நடிகரும், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய் உடனான உறவை முறித்துக்கொள்ள அவரது மனைவி சங்கீதா தொடுத்துள்ள விவாகரத்து வழக்கு கடந்த சில தினங்களாக பூதாகரமாகி வருகிறது. கடந்த 1998ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்ட விஜய்க்கு, ஆண் மற்றும் பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தொடக்க காலத்தில் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா, விருது நிகழ்வுகளில் கலந்துகொண்ட சங்கீதா, சமீப காலங்களாக பொதுவெளியில் தலைகாட்டாமலே இருந்து வந்தார்.
கடைசியாக 2022இல் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய்யுடன் பங்கேற்ற சங்கீதா அதன் பிறகு எந்தவித விழாவிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி அறிவிப்பு உள்ளிட்ட எந்த நிகழ்விலும் அவர் பங்கேற்கவில்லை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் இருப்பதால், சங்கீதா லண்டனில் தனிமையில் வசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் உலா வந்து கொண்டிருந்தன.
இந்த சூழ்நிலையில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக செய்தி வெளியாகின. அதாவது, சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சங்கீதா தரப்பில், விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த ஏப்ரல் 2021-ஆம் ஆண்டு, தனது கணவர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருந்தது தெரிய வந்தது. இதனால், தான் ‘mental cruelty’ நிலைக்கு சென்றேன். இது தனக்கு ஆழ்ந்த உணர்ச்சி வலியையும் மன வேதனையையும் ஏற்படுத்தியது. இது திருமண நம்பிக்கையை மீறுவதற்கும் துரோகத்திற்கும் சமம்.
செப்டம்பர் 2021- பிப்ரவரி 2022 -ல் சமாதானம் செய்வதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, இந்த விவகாரத்தை மேற்கொண்டு கொண்டுசெல்ல அப்போது விரும்பவில்லை. ஆனாலும், எனது கனவர் நடிகையுடனான அந்த உறவை கைவிடுதாய் இல்லை. வீட்டிற்குள்ளேயே நான் தனித்து விடப்பட்டேன். மேலும், அந்த நடிகையுடன் வெளிநாட்டுப் பயணத்தை தொடர்ந்தபடி இருந்தார். அந்த நடிகை, இதுதொடர்பான சில படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டபடி இருந்தார். இந்தப் படங்கள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதுகுறித்து என்னிடம் எந்தவித வருத்தமோ மறுப்போ தெரிவிக்கவில்லை. இந்த திருமணத்தை மீறிய உறவால், வீட்டில் இருந்த எனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது. நிதி தொடர்பான எனது சுதந்திரமும் முடக்கப்பட்டது. எனவே, இந்த திருமண உறவை உடனடியாக முடித்து வைக்கவேண்டும். வழக்கு நடைபெறும் போது மாதாந்திர ஜீவனாம்சமும், வழக்கு முடிவுக்கு வந்த பிறகு முழு ஜீவனாம்சமும் தரவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 ஆம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதில் விஜய் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளும், கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் கட்சிக்காரர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் சங்கீதா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர் மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.
இந்த ஆபாச தாக்குதலுக்கு விஜய் தரப்பில் இருந்து எந்தவித கண்டமும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கருத்துச் சுதந்திரம் அல்ல டிஜிட்டல் வன்முறை…! விஜய் – சங்கீதா இடையிலான விவாகரத்து மனு தாக்கல் என்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை. இதைச் சமூக வலைதளங்களில் ஆபாசமாக விவாதிக்கவோ, இழிவுபடுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. விஜய்யின் பெயரைக் கூறிக்கொண்டு அவரது தொண்டர்கள் சங்கீதாவிற்கு எதிராக ஆணாதிக்க வன்முறைப் பதிவுகள் மற்றும் கேலிச்சித்திரங்களைப் பரப்பி வருகின்றனர். இது கருத்துச் சுதந்திரம் அல்ல, பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை. பொதுவாழ்விற்கு வந்த பிறகு இத்தகைய செயல்களைக் கண்டிக்காமல் தவெக தலைவர் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த மௌனம், வன்முறைக்கு வழங்கப்படும் மறைமுக ஒப்புதலாக அமையும். ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க சமூக வலைதள வன்முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு அரசியல் சுட்சி தலைவரின், அரசியல் சமூக பொறுப்பு. ஆபாசப் பதிவுகளைத் தடுத்து நிறுத்த சைபர் குற்றப்பிரிவு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



