Homeவிளையாட்டுஆர்சிபி Final Qualification IPL 2026: தொடர்ச்சியாக 2வது முறை இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி - தடுப்பது...

ஆர்சிபி Final Qualification IPL 2026: தொடர்ச்சியாக 2வது முறை இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி – தடுப்பது எந்த அணி?

நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 2வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011); மும்பை இந்தியன்ஸ் (2019, 2020) அணிகள் மட்டுமே தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றன.

சிஎஸ்கே மற்றும் மும்பை அணியின் சாதனைப் பட்டியலில் இணைந்துகொள்ள ஆர்சிபிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே வேண்டும். அதேநேரத்தில், வரும் மே 31ஆம் தேதி (ஞாயிறு) அன்று அகமதாபாத் நகரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியை தடுக்க முடியுமா?, முடியும் என்றால் அது எந்த அணியால் முடியும் என்பதை இங்கு காணலாம்.

ஆர்சிபி அணியை பொறுத்தவரை பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பான வீரர்களை கொண்டுள்ளது. அதனால் மட்டுமே ஆர்சிபி அணி அதிக நெட் ரன்ரேட் உடன் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது மட்டுமின்றி, இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக தகுதிபெற்றிருக்கிறது.

ஆர்சிபி தோற்ற அணிகள்
ஆனாலும், 14 லீக் போட்டிகளில் 9இல் வென்றாலும் 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 5 அணிகளிடம் ஆர்சிபி தோற்றிருந்தது. இதில், லக்னோ மற்றும் டெல்லி அணிகளை தவிர 3 அணிகளுமே பிளே ஆப் வந்திருக்கிறது.

குஜராத்தை அடக்கிய ஆர்சிபி
நேற்று (மே 26) தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் ஆர்சிபி அணியிடம் 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, குஜராத் டைட்டன்ஸ் அணி சரணடைந்துவிட்டது. இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் நடப்பதால் குஜராத் அணி எப்படியாவது குவாலிபயர் 2 போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என முனைப்பில் காத்திருக்கிறது.

அடுத்தடுத்த போட்டிகள்
இந்தச் சூழலில், இன்று (மே 27) எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற இருக்கிறது.

இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணியே, வரும் மே 29ஆம் தேதி குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சந்திக்கும். இப்போட்டியும் முலான்பூரிலேயே நடைபெற இருக்கிறது.

குஜராத், ராஜஸ்தான் அணியின் வீக்னஸ்
அந்த வகையில், இறுதிப்போட்டியில் ஆர்சிபி தடுக்கும் ஒரே வல்லமை மிக்க அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணியை போல் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறந்து விளங்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளது. மாறாக, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஓரிரு வீரர்களை மட்டுமே நம்பியிருக்கிரது.

குறிப்பாக, குஜராத் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மான் கில், ஜாஸ் பட்லர்; பந்துவீச்சில் ரபாடா, சிராஜ். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, ஜூரேல்; பந்துவீச்சில் ஆர்ச்சர்.

ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொருத்தவரை டாப் டூ பாட்டம் வரை அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ஆகியோரும் பந்துவீச்சில் ஷகிப் ஹூசைன், இஷான் மலிங்கா, பாட் கம்மின்ஸ் ஆகியோரும் மிரட்டுகின்றனர்.

ஹைதராபாத் அணியின் பலம்
எனவே, ஆர்சிபி அணியுடன் இறுதிப்போட்டியில் எஸ்ஆர்ஹெச் அணி மோதினால் மட்டுமே, ஆர்சிபிக்கு சற்று கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதே கருத்தை அஸ்வினும் அவரது யூ-ட்யூப் தளத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆர்சிபி – எஸ்ஆர்ஹெச் அணிகளுக்கு எதிரான கடைசி லீக் போட்டியையும் எஸ்ஆர்ஹெச் வென்றது குறிப்பிடத்தக்கது.

பிளேயிங் லெவன் விவரம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, ரவிச்சந்திரன் ஸ்மரன், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், எஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன், பிரபுல் ஹிங்கே

இம்பாக்ட் வீரர்கள்: டிராவிஸ் ஹெட், லியாம் லிவிங்ஸ்டன், அனிகேத் வர்மா, ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே

ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டோனோவன் ஃபெரீரா, ஷுபம் துபே, தசுன் ஷனகா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், யாஷ் ராஜ் புஞ்சா, பிரிஜேஷ் சர்மா

இம்பாக்ட் வீரர்கள்: ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய்

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை